தொடர்-தொகுப்பு நிகழ்வு செப்டம்பர் 2024

தொடர்-தொகுப்பு நிகழ்வு செப்டம்பர் 2024. இடம்: ஏற்காடு நீண்ட நாடகள் பிறகு தமிழ் விக்கிப்பீடிய அன்பர்களைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி உண்டாயிற்று. முதல் நாள் இரவே ஏற்காட்டிலுள்ள விடுதியில் சென்றடைந்தேன். விடுதி அறையில் நிவாஸுடன் தங்கியிருந்தேன். நீண்ட நேரம் அவருடன் உரையாடினேன். சிஐஎஸ் இன் பணி பற்றியும், விக்கிச் சமூக நிகழ்வுகள் பற்றியும், தற்பொழுது திட்டமிடப்படும் இந்திய அளவிலான விக்கி மாநாடு பற்றியும் அறிந்துகொண்டேன். மிகவும் சுவாரஸ்யமான உரையாடலாக இருந்தது.
Tamil Wikipedian Yercaud Meeting
கூடலில் நான் உரையாடிய போது | புகைப்படம் ஶ்ரீதர் | CC BY-SA 4.0
அடுத்த நாளில் நிகழ்ச்சி தொடங்கியது. கூகுள் இயந்திரம் மூலம் மொழிப்பெயர்க்கப்பட்ட கட்டுரைகளைச் சரிசெய்ய எப்படி செய்யலாம் என்பதையும், எந்தக் கட்டுரைகளை யார் செய்வது போன்ற உரையாடல்கள் நடந்தது. பின்பு ஒவ்வொருவரும் ஒரு கட்டுரையைத் தேர்ந்தெடுத்து எழுத ஆரம்பித்தோம். இடையிடையே மற்ற பயனர்களுக்குச் சந்தேகம் வரும்பொழுது அவர்களுடன் உரையாடி சந்தேகங்களைத் தீர்த்துவைத்தேன்.
Tamil Wikipedia 21st Birthday Celebration
தமிழ் விக்கிப்பீடியாவின் 21ஆம் ஆண்டு முன்னிட்டு கேக் வெட்டப்பட்டது. | புகைப்படம் Neechalkaran | CC BY-SA 4.0
தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி இருப்பத்தியொரு ஆண்டுகள் ஆகிறது. அதற்காக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மாலை சுமார் ஐந்து மணிக்கு நிகழ்ச்சி நிறைவு அடைந்த பிறகு, விக்கி பயனர்களுடன் நடையாக ஏற்காட்டுப் பூங்கா மற்றும் ஏரி சுற்றிய பகுதிகளைச் சுற்றிப்பார்த்தோம். உணவுக்குப் பின் நீண்ட நேரம் உரையாடல் செய்தோம். அப்பொழுது அண்மையில் கலைஞர் அவர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆகியதையும் அந்நூல்களை மெய்ப்பு செய்வதற்குப் போட்டியாக ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யலாம் என்று ஒரு எண்ணம் தோன்றியது. அதற்காக ஒரு திட்டப்பக்கத்தை உருவாக்கினேன். அடுத்த நாள், மேற்கோள்கள் இல்லாத கட்டுரைகளுக்கு மேற்கோள்கள் செய்யும் பணிகளைத் தொடங்கினோம். நீச்சல்காரன் தானியங்கி மூலம், மேற்கோள்கள் இல்லாத தமிழ்க் கட்டுரைகளுக்கு, ஆங்கில விக்கிப்பீடியாவின் கட்டுரைகளில் இருந்து தமிழுக்கு வருவது போல் செய்து சிலப்பல கட்டுரைகளைச் சோதித்துக் கொண்டிருந்தார். பல பழைய தமிழ்த் திரைப்பட கட்டுரைகளுக்கு மேற்கோள்கள் இல்லை. அதற்கு ஆங்கிலக் கட்டுரைகளும் இல்லை. அதற்குச் செல்வசிவகுருநாதன், பாலு, பார்வதி அவர்களின் முயற்சியால் 'பிலிம் நியூஸ்' ஆனந்தன் எழுதிய 'சாதனைப் படைத்தத் தமிழ்த்திரைப்பட வரலாறு' என்னும் நூலைக் கொண்டுவந்தனர். அந்நூலில் மேற்கோள் காட்டும் படியான பல திரைப்படத் தகவல்கள் இருந்தன. அந்நூலைப் பல கட்டுரைகளுக்கு மேற்கோள் காட்ட முடியும் என்பதால் அதற்காக 'வார்ப்புரு:தமிழ்த்திரைப்பட வரலாறு' என்னும் வார்ப்புருவை உருவாக்கி உடன் இருந்த பயனர்களான அருளரசன், பாலு, சத்திரத்தான், மகாலிங்கம் ஆகியோருக்கு எடுத்துரைத்தேன். நாங்கள் அனைவரும் சேர்ந்து, 273 கட்டுரைகளுக்கு இவ்வார்ப்புரு மூலம் மேற்கோள் சேர்த்து அவை அனைத்தையும் மேற்கோள் உள்ள கட்டுரைகளாக மாற்றினோம்.
ஏற்காடு செப்டம்பர் 2024 குழு புகைப்படம்
நினைவிற்காக ஒரு குழுப் படம் | புகைப்படம் Nivas (CIS-A2K) | CC BY-SA 4.0
பின்னர் தொடர்ந்து பணியாற்றிவரும் தமிழ் விக்கிப்பீடிய பங்கேற்பாளர்கள் சிலருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மன நினைவுடன் நிகழ்ச்சி முடிந்து திரும்பினோம். நிகழ்ச்சியை முன்னின்று நடத்திய செல்வசிவகுருநாதன், பாலசுப்பிரமணியம், ஶ்ரீதர் மற்றும் மற்ற தன்னார்வலர்களுக்கு மிக்க நன்றிகள்.

Comments